Sunday, March 2, 2008

சென்னைக்கு மேல் நிலவு

குளிரின் விறைப்பில்
கதகதப்புத் தேடும்
கண்டத்துக்கு வந்துவிட்ட
உங்களுக்கும்,
எலிகளுடனே
சென்னையின் ஒரு
சிமிண்ட் பொந்தில்
குடியிருக்கும் எனக்கும்
எப்போதும் எரிகிறது
உள் மனத்தில்
தமிழகத்து வெயில்.

நெய்தல் மெரீனாவில்
சித்திரை நெருப்புக்கு
ஒத்தடம் தரும்
மாலைப் பொழுதும்
மனசுக்குள் எங்கோ
புகைகிறது.

கடல்கடல் என்று
பஸ்பஸ்ஸாய்
வந்திறங்கி
வந்திறங்கி
வரட்டுக் காற்றை வாங்கிவிட்டு
இப்போது
வீட்டுக்கு வீட்டுக்கு என்று
பஸ் நிறுத்தத்தில்
அடர்கிறது ஜனத்தொகை.
சற்றே வெற்றி என்று
சப்புக் கொட்டிய
குடும்பக் கட்டுப்பாட்டுப்
பிரசாரகர்களும்
பஸ் நெரிசலில் அகப்பட்டுத்
திணறுகிறார்களாம்;
அடேங்கப்பா
இவ்ளோ ஜனங்களா
என்ற அவர்கள் திரிசங்குக் குரல்
ஜனங்களைத் தாண்டி ஒலிக்கிறது.

குமிழிகள்

இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு

அறைகூவல்

இதுபுவியை நிலாவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே
நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்திநிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீறாகு!

மானுடம்


ஒரு ஜூலை ஒன்பது நாள்
சிங்கள வெறியின்
குதறலில் சிக்கி இ
லங்கையில் அலறிற்று
தமிழ்ச் சனம்
அலறலைக் கேட்ட
உலகத்துக்கு
இலங்கைத் தமிழ்
விளங்கவில்லை.
ஆயினும் மானுடம்
ஒரே இனம்.

அலறல் மெஷின்கன்
உறுமலாய் மாறிற்று.
ஒர்ர்ரே பொணம்!

வண்ணத்துப் பூச்சியும் கடலும்


சமுத்திரக் கரையில்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

சாசனம்


Government
By the People
Of the People
For the People
என்ற
ஜனநாயகச் சுலோகம்
பிறந்தது ஆபிரஹாம்
லிங்கனிடம் அங்கே.
அருமையான கருத்து
இருந்தாலும்
கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன் தோன்றி
மூத்தக்குடி எங்களுக்கு
ஏற்றபடி அதில்
அரிய ஒரு
சிறிய திருத்தம்
Government
By the People
Of the People
Fuck the People

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது



Epic


A feather detaching itself
From the wing
Render on the
Pages of the wind
The lif of the bird