Sunday, March 2, 2008

சென்னைக்கு மேல் நிலவு

குளிரின் விறைப்பில்
கதகதப்புத் தேடும்
கண்டத்துக்கு வந்துவிட்ட
உங்களுக்கும்,
எலிகளுடனே
சென்னையின் ஒரு
சிமிண்ட் பொந்தில்
குடியிருக்கும் எனக்கும்
எப்போதும் எரிகிறது
உள் மனத்தில்
தமிழகத்து வெயில்.

நெய்தல் மெரீனாவில்
சித்திரை நெருப்புக்கு
ஒத்தடம் தரும்
மாலைப் பொழுதும்
மனசுக்குள் எங்கோ
புகைகிறது.

கடல்கடல் என்று
பஸ்பஸ்ஸாய்
வந்திறங்கி
வந்திறங்கி
வரட்டுக் காற்றை வாங்கிவிட்டு
இப்போது
வீட்டுக்கு வீட்டுக்கு என்று
பஸ் நிறுத்தத்தில்
அடர்கிறது ஜனத்தொகை.
சற்றே வெற்றி என்று
சப்புக் கொட்டிய
குடும்பக் கட்டுப்பாட்டுப்
பிரசாரகர்களும்
பஸ் நெரிசலில் அகப்பட்டுத்
திணறுகிறார்களாம்;
அடேங்கப்பா
இவ்ளோ ஜனங்களா
என்ற அவர்கள் திரிசங்குக் குரல்
ஜனங்களைத் தாண்டி ஒலிக்கிறது.

1 comment:

Jayaprakashvel said...

this is piramil-tharumu sivaram-poetry?
or u r an another piramil by the name